ஆவடி: ஆவடி மாநகராட்சி பருத்திப்பட்டு ஏரி சுமார் 87 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த ஏரி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஏரி ஆவடி பகுதி மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இங்குள்ள குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கால்வாய் வழியாக ஏரியில் கலக்கிறது. இதனால், ஏரி நீர் தொடர்ந்து மாசடைந்து வந்தது. இதனையடுத்து, ஏரி ரூ.28 கோடியில் புரனமைக்கப்பட்டது. மேலும், ஏரியை சுற்றி நடைப்பாதை அமைக்கப்பட்டு, ‘பசுமை பூங்கா’ உருவாக்கப்பட்டது. இதில், பறவைகள் தங்க மணல் திட்டுகள் உருவாக்கப்பட்டது. மேலும், ஏரியில் படகு சவாரியும் தொடங்கப்பட்டது. இதனையடுத்து, ஏரிக்கு நாள்தோறும் மக்கள் போக்குவரத்து அதிகரித்துவந்தது. இங்கு காலை, மாலை வேளைகளில் பொதுமக்கள் ஏரியை சுற்றியுள்ள நடைப்பாதையில் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்து வருகின்றனர். இருந்தபோதிலும் ஏரியில் விடப்படும் கழிவுநீர் தடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இங்குள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் பருத்திப்பட்டு ஏரியில் தொடர்ந்து கலந்து வருகிறது. இந்த ஏரியில், பொதுப்பணித்துறை சார்பில் மீன் வளர்க்க குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று காலை ஏரியில் பல இடங்களில் கொத்துக்கொத்தாக மீன்கள் செத்து மிதந்தன. இதனை பார்த்த நடைபயிற்சி வந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஏரியில் அகற்றப்பட்ட 2 டன் எடையுள்ள மீன்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மீன்களை சேக்காட்டில் உள்ள குப்பை கிடங்கில் பல அடி ஆழத்திற்கு குழி தோண்டி புதைத்தனர். தகவலறிந்த மாசு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் ஏரி நீரை பரிசோதனைக்காக எடுத்து சென்றுள்ளனர்.* ஆக்சிஜன் தட்டுப்பாடுபொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், `ஆவடி பகுதியில் கடந்த சில தினங்களாக அடிக்கடி மழை பெய்து வந்தது. இதன் காரணமாக, ஏரியில் தட்பவெப்பநிலை மாற்றம் அடைந்துள்ளது. மேலும், மீன்களுக்கு தேவையான ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஏரியில் மீன்கள் செத்து மடிந்துள்ளது,’ என்றனர். * கழிவுநீர் கலப்பு நாளுக்கு நாள் அதிகரிப்புசமூக ஆர்வலர்கள் கூறுகையில், `பருத்திப்பட்டு ஏரியில் நாளுக்கு நாள் கழிவுநீர் அதிக அளவில் விடப்படுகிறது. இதன் காரணமாக, ஏரி நீர் மாசடைந்து வருகிறது. இதனால், ஏரியை சுற்றியுள்ள குடியிருப்புகளில் நிலத்தடி நீர் பாதிப்படைகிறது. இதனை தடுக்க, பொதுப்பணித்துறை அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.



from Dinakaran.com |01 Sep 2021 https://ift.tt/3t3SpDN