சென்னை: கொரோனா 2வது அலை காரணமாக, சங்கங்களின் பொதுக்குழு கூட்டத்தை இணையவழி மூலம் நடத்த அனுமதி அளித்து பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து பதிவுத்துறை தலைவர் சிவன் அருள் அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தமிழ்நாடு சங்கங்களின் பதிவு சட்டத்தின் கீழ் பிரிவு 26ன்படி ஆண்டுதோறும் சங்க பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட வேண்டும். கொரோனா  முதல் அலையின் போது 2019-20 நிதியாண்டிற்கு சங்கங்களின் பொதுக்குழு கூட்டங்கள் இணையவழி நடத்திட அனுமதி வழங்கப்பட்டது போன்று 2ம் அலை கொரோனா  காரணமாக 2020-21 நிதியாண்டிற்கு பொதுக்குழு கூட்டங்கள் இணையவழி நடத்திட அனுமதி கோரப்பட்டது. அதன்பேரில், இணையவழி சங்க பொதுக்குழு கூட்டம் நடத்த அனுமதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இணையவழி சங்க கூட்டம் நடத்துவது தொடர்பாக வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன. *  இணையவழி கூட்டம் நடத்தப்படும் நிகழ்வு முழுவதையும் வீடியோ பதிவு செய்து திருத்தம் செய்யப்படாத இரண்டு சிடிக்களில் சேமிக்கப்பட்டு சங்க பதிவாளருக்கு கோர்வைக்கு தாக்கல் செய்யப்படும் போது சமர்ப்பிக்கப்பட வேண்டும். கூட்ட நிகழ்வு முழுமையாக திருத்தம் செய்யப்படாத ஒளி மற்றும் ஒலிப்பதிவு செய்யப்பட்டு குறுந்தகட்டில் சேமித்து வழங்கப்பட வேண்டும்.* ஆள் மாறாட்டம் ஏதும் நடைபெறாத வண்ணம் தகுந்த சரிபார்ப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் சங்கத்தினரால் மேற்கொள்ளப்பட வேண்டும். பொதுக்குழு மற்றும் தேர்தல் நடத்தும் போது சங்கத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் லாக் இன், பாஸ்வேர்டு, லிங்க் அளிப்பது சங்க நிர்வாகிகள் கடமை ஆகும். தவறும் பட்சத்தில் இதனால் ஏற்படும் புகார்களுக்கு சங்கமே பொறுப்பேற்க வேண்டும்.* இவ்வாறான இணையவழி கூட்டம் நடத்துவதற்கான அனுமதியானது. தற்போது நிலவும் கோவிட்-19 பெருந்தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் வழங்கப்படுகிறது. இந்த அனுமதி 2020-21ம் நிதியாண்டுக்கு நடத்தப்படும் பொதுக்குழு கூட்டத்திற்கு மட்டுமே பொருந்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



from Dinakaran.com |31 Jul 2021 https://ift.tt/3idKSOT