கோவை: காஷ்மீரில் உள்ள ஜம்மு நகரில் இந்திய விமான படை தளத்தில் டிரோன் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து நாடு முழுவதும் முப்படைகளும் உஷார்படுத்தப்பட்டுள்ளது.  கோவை ரெட்பீல்டு கடற்படை வளாகம் உஷார்படுத்தப்பட்டு, 24 மணி நேர கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இங்கு அன்னிய நபர்கள் சென்று வர தடை விதிக்கப்பட்டுள்ளது. ெரட்பீல்டு வளாகத்தை சுற்றியும் 3 கி.மீ. தூரத்துக்கு டிரோன் கேமரா பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வணிக, வர்த்தக நிறுவனங்கள், விழா நடத்துவோர் தங்களது நிகழ்வுகளை டிரோன் கேமரா மூலமாக இந்த பகுதியில் வீடியோ பதிவு செய்ய கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி டிரோன் கேமரா பறக்க விட்டால் சுட்டு வீழ்த்த உத்தரவிடப்பட்டுள்ளது. கேமரா பறக்க விடும் நபர்கள் மீது போர் முயற்சி, சதி திட்டம், இயந்திரங்களை தவறாக பயன்படுத்துதல், பாதுகாப்புக்கு எதிராக செயல்படுதல், மக்கள் உயிருக்கு அச்சுறுத்தல் போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்படும் என கடற்படை பிரிவினர் எச்சரித்துள்ளனர். சூலூரில் உள்ள விமானப்படை பிரிவு வளாகம் மற்றும் ராணுவ தளங்களிலும், குருடம்பாளையம் சி.ஆர்.பி.எப் பயிற்சி வளாக பகுதியிலும் டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.



from Dinakaran.com |01 Jul 2021 https://ift.tt/3hn4heD