மதுரை: நெல்லை மாவட்டம், மூன்றடைப்பு அருகே வாகைக்குளத்தைச் சேர்ந்த பாவநாசம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘என் மகன் முத்துமனோ (27). தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் மாவட்ட இளைஞரணித் தலைவர். கொலை மிரட்டல் வழக்கில் கைதாகி பாளை சிறையில் இருந்தவர், கடந்த ஏப். 22ல் கொலை செய்யப்பட்டார். கொலை குறித்து நீதித்துறை விசாரணை நடத்தவும், துவக்க கட்ட விசாரணை அறிக்கை தாக்கல் செய்யவும், சிறைத்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், ரூ.2 கோடி இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு மூத்த வக்கீல் வீராகதிரவன் ஆஜராகி, ‘‘பிரேத பரிசோதனை முடிந்து 69 நாட்களாகி விட்டது. பெரும்பாலான கோரிக்கை நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்தப்படுகிறது. நெருக்கடியான கொரோனா காலகட்டத்தில் 15 பேர் போராடினால் கூட நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பில் ஈடுபட வேண்டியுள்ளது’’ என்றார். அப்போது மனுதாரர் தரப்பில், அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்ட பிறகே உடலை வாங்குவோம் என கூறப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள், ‘‘ஜூலை 2 (நாளை) மாலை 3 மணிக்குள் முத்து மனோவின் உடலை உறவினர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், மாவட்ட நிர்வாகத்தின் தரப்பில், உடலை எடுத்துச் சென்று இரவு 7 மணிக்குள் இறுதி சடங்கு நடத்தி முடிக்க வேண்டும். உடலை அவரது உறவினர்கள் பெற்றுக்கொண்ட பிறகு, இந்த மனு மீதான கோரிக்கையை நீதிமன்றம் பரிசீலிக்கும்’’ என உத்தரவிட்டனர்.  * மனித உரிமை ஆணையம் உத்தரவுகைதி முத்துமனோ உயிரிழந்த விவகாரம் குறித்து மாநில மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வு பிரிவு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.



from Dinakaran.com |01 Jul 2021 https://ift.tt/362Obl1