சென்னை: நகர பேருந்துகளில் (டவுன் பஸ்) புதிய வண்ணம் பூச நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன்  தெரிவித்தார். இதுகுறித்து போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: அரசு பேருந்துகளில்  திருவள்ளுவர் படத்துடன் திருக்குறள் மற்றும் அதற்கான தெளிவுரையும் இடம்பெறும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்தாலும் பயணிகளுக்கான டிக்கெட் கட்டணம் உயர்த்தும் எண்ணம் அரசுக்கு இல்லை. தற்போது இயக்கப்படும் பேருந்துகளில் 6,262 பேருந்துகள் சாதாரணமானவை. இதில், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் இலவசமாக பயணம் செய்யலாம். நகர பேருந்துகளில் புதிய வண்ணம்  பூச நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து முதல்வருடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கை  எடுக்கப்படும்.தமிழக அரசு 500 எலக்ட்ரிக்கல் பேருந்துகள் வாங்க ஜெர்மனி நாட்டில் உள்ள ஒரு கம்பெனியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதேபோது, 2000 டீசல் பேருந்துகள் வாங்க பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருகிறது. 27  மாவட்டங்களுக்கு நேற்று முன்தினம் இயக்கப்பட்ட பேருந்துகள் மூலம் 22 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர். பயணிகளின் வருகைக்கு ஏற்ப பேருந்துகளின்  எண்ணிக்கை அதிகரிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.ரூ.31,000 கோடி நஷ்டம்அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியதாவது, ‘தமிழகம் முழுவதும் உள்ள அரசு போக்குவரத்து கழகத்துக்கு மொத்தம் ரூ.31 ஆயிரம் கோடி அளவில் போக்குவரத்துதுறைக்கு நஷ்டம் உள்ளது. அதிமுக அரசால் நிறுத்தி வைக்கப்பட்ட அனைத்து  இடங்களிலும் பேருந்துகளை இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றார்.



from Dinakaran.com |30 Jun 2021 https://ift.tt/3qBQYLK