சென்னை: மெட்ரோ ரயில் நிலையங்களில் 20% தள்ளுபடியுடன் கூடிய கியூஆர் குறியீடு பயணச்சீட்டு அறிமுகப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து, மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு தளர்வுகள் அறிவித்ததை தொடர்ந்து சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் கடந்த 21ம் தேதி முதல் 50 சதவீத இருக்கை வசதிகளுடன் மீண்டும் தொடங்கியது. பயணிகள் முகக்கவசம் அணியாவிட்டாலோ அல்லது முகக்கவசம் சரியாக அணியவில்லை என்றாலோ உடனடி அபராதமாக ரூ.200 வசூலிக்கப்படுகிறது. அனைத்து ரயில் நிலைய நடைமேடைகளில் பயணிகள் பயன்படுத்தும் மற்றும் காத்திருக்கும் இடங்களில் தனிமனித இடைவெளி குறித்த X குறியீடுகள் வைக்கப்பட்டுள்ளன. அதேபோல், மெட்ரோ ரயில் நிலைய நடைமேடைகளில் பயணிகளின் வருகை, வெளியேறுதல் மற்றும் தனிமனித இடைவெளியைக் கண்காணிப்பதற்காக தேவையான ஊழியர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்புக் கேமரா மூலம் பயணிகளின் தனிமனித இடைவெளி கண்காணிக்கப்படுகிறது. பாதுகாப்பு நடவடிக்கையாக அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் 20% கட்டணத் தள்ளுபடியுடன் தொடர்பு இல்லாத கியூஆர் குறியீடு பயணச்சீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் மின்தூக்கியை தொடுதலின்றி காலால் இயக்கும் கருவி மற்றும் கழிப்பறைகளில் உள்ள தண்ணீர் குழாய்களை இயக்க கைகளை பயன்படுத்தாமல் காலால் இயக்கும் பட்டன்கள் பொருத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



from Dinakaran.com |01 Jul 2021 https://ift.tt/2TeL9HR