சென்னை: தடை செய்யப்பட்ட பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் வீடியோ கேம்களை லைவ்வாக விளையாடி அதனை யூடியூபில் பதிவு செய்து வந்தவர் மதன். இவர், ஆன்லைனில் பப்ஜி கேம் விளையாடும்போது பெண்கள் குறித்து ஆபாசமாக பேசி வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார். இதனால் சிறுவர், சிறுமிகள் பலர் பாதிப்படைந்ததாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து, பப்ஜி மதன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார், பெண்களை ஆபாசமாக திட்டுதல், தடை செய்யப்பட்ட செயலியை பயன்படுத்துதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.அதே போல்  மதன் யூடியூப் சேனலின் நிர்வாகியாக இருந்த அவரது மனைவி கிருத்திகாவையும் கடந்த 16ம் தேதி சிபிசிஐடி போலீசார் கைது செய்து கை குழந்தையுடன் சிறையில் அடைத்தனர்.இந்நிலையில் கிருத்திகா ஜாமீன் கோரி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பரமசிவம் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி இரண்டு பேர் 1 லட்ச ரூபாய் பிணை தொகை செலுத்த வேண்டும் என்று நிபந்தனை ஜாமீன் வழங்கினார். இதே போல் பப்ஜி மதன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். அப்போது மதனை ஜாமீனில் வெளியே விட்டால் சாட்சியங்களை அழித்து விடுவார். ஜாமீன் வழங்க வேண்டாம் என்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர். இதனை அடுத்து மதனின் ஜாமீன் மனுவை நீதிபதி பரமசிவம் தள்ளுபடி செய்தார்.



from Dinakaran.com |30 Jun 2021 https://ift.tt/2URRrxt