சேலம்: சேலம் அருக, சட்டமன்ற தேர்தலில் அதிமுகவினர் டோக்கன் கொடுத்து  பொருட்கள் தருவதாக தெரிவித்து ஓட்டு வாங்கி வெற்றி பெற்ற பின்னர், ஏமாற்றி விட்டதாக கூறி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம், ஏற்காடு தொகுதியில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில், அதிமுக சார்பில் சித்ரா போட்டியிட்டு வெற்றி பெற்றார். முன்னதாக பிரசாரத்தின் போது, அவரை ஆதரித்து ஏற்காடு தொகுதிக்குட்பட்ட அயோத்தியாப்பட்டணம் பேரூராட்சி பகுதியில், அதிமுகவினர் வீடு வீடாக டோக்கன் வழங்கியுள்ளனர். அப்போது, சித்ராவை வெற்றி பெறச் செய்தால், தலா ₹2 ஆயிரம் மதிப்பிலான மளிகை பொருட்கள் வீடு தேடி வரும் என உறுதி அளித்தனர். ஆனால், அவர்கள் கூறியவாறு மளிகை பொருட்கள் எதுவும் கொடுக்கவில்லை. தற்போது, கொரோனா முழு ஊரடங்கால், மக்கள் வீட்டில் முடங்கியுள்ள நிலையில், வாக்குறுதி அளித்தபடி மளிகை பொருட்களை எப்போது தருவீர்கள் என டோக்கனை காண்பித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பியபோது அதிமுகவினர் நழுவியுள்ளனர். இதனை கண்டித்து அயோத்தியாப்பட்டணம் பகுதி மக்கள், நேற்று சந்தைப்பேட்டையில் டோக்கன்களுடன் திரண்டனர். பின்னர், அதனை சேலம்-பேளூர்  நெடுஞ்சாலையில் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘தேர்தலுக்கு 2 நாட்களுக்கு முன்பு அதிமுகவினர், ஏற்காடு சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சித்ராவை வெற்றி பெற வைத்தால், தலா ₹2 ஆயிரம் மதிப்பிலான மளிகை பொருட்கள் தருவதாக உறுதியளித்து டோக்கன் வழங்கினர். கொரோனா காலத்தில் வேலையின்றி தவித்து வரும் நிலையில், ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் உதவியாக இருக்கும் என்பதால், எங்கள் பகுதி மக்கள் அதிகளவில் அதிமுகவினருக்கு வாக்களித்தோம். ஆனால், வெற்றி பெற்ற பின்பு, நன்றி தெரிவிக்க கூட சித்ரா எம்எல்ஏ வரவில்லை. இப்போது வருவாய் இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே, எங்களுக்கு அதிமுகவினர் கூறியபடி நிவாரணம் வழங்க வேண்டும்,’’ என்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்துக்கு பின்னர், அங்கிருந்து கலைந்து சென்றனர்.



from Dinakaran.com |01 Jun 2021 https://ift.tt/34BqP5e