சென்னை: பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான கே.வி.ஆனந்த் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 54. கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த அவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் ஆவார். முதலில் பல்வேறு படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய இவர் பின்னர் இயக்குனராக உருவெடுத்து பல்வேறு வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.அயன், மாற்றான், கவண், காப்பான், கோ, அநேகன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை இயக்கியவர் கே.வி. ஆனந்த்.  பல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள கே.வி.ஆனந்த் கனாகண்டேன் படம் மூலம் இயக்குநரானார். நேருக்குநேர், முதல்வன், சிவாஜி, பாய்ஸ் உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.தொடக்க காலத்தில் விகடன் உள்ளிட்ட பத்திரிகைகளில் கே.வி.ஆனந்த் புகைப்பட கலைஞராக பணியாற்றினார்.நடிகர் மோகன்லால் நடித்த தேன்மாவின் கொம்பத்து மலையாள படம் மூலம் ஒளிப்பதிவாளரானார் கே.வி.ஆனந்த்.தமிழில் முதல் முறையாக காதல் தேசம் படத்துக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கே.வி.ஆனந்த்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் இன்று அதிகாலை 3 மணிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் கே.வி.ஆனந்த் உயிரிழந்தார். பல்வேறு தரப்பினர் அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.மாரடைப்பால் நடிகர் விவேக் உயிரிழந்த சோகம் தணிவதற்குள், மற்றொரு திரை ஆளுமையும் மறைந்தது தமிழ்த் திரையுலகை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.



from Dinakaran.com |30 Apr 2021 https://ift.tt/2PyL53A