சென்னை: திருடுபோன தனது ஆட்டோவிலேயே சவாரி சென்று சாதுரியமாக பேசி கொள்ளையனை, பொதுமக்கள் உதவியுடன் பிடித்து போலீசில் ஆட்டோ டிரைவர் ஒருவர் ஒப்படைத்த நிகழ்வு கே.ேக.நகரில் நடந்துள்ளது. கே.ேக.நகர் ராணி அண்ணா நகரை சேர்ந்தவர் பிரித்விராஜ்(22). இவர், சொந்தமாக ஆட்டோ வாங்கி ஓட்டி வருகிறார். கடந்த 2ம் தேதி இரவு வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த ஆட்டோ திடீரென மாயமானது. இதுகுறித்து பிரித்விராஜ் கே.ேக.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில், ேநற்று முன்தினம் பிரித்விராஜ் நண்பர் ஒருவரை பார்க்க பரங்கிமலைக்கு சென்றுள்ளார். அப்போது சாலையோரம் ஆட்டோ ஒன்று நின்றிருந்தது. அந்த ஆட்டோவை பார்த்ததும் பிரித்விராஜிக்கு தனது ஆட்டோ போல் இருப்பதாக கருதி அருகில் சென்று பார்த்த போது பதிவு எண் மட்டும் மாற்றப்பட்டிருந்தது. ஆட்டோவில் உள்ள சீட் தனது ஆட்டோ போன்று இருந்தது. அப்போது ஆட்டோவில் அமர்ந்து இருந்த நபர், சவாரி போகணுமா என்று கேட்டார். அதற்கு, பிரித்விராஜ் ஆமாம், கே.கே.நகர் வரை செல்ல வேண்டும் என்று கூறினார். அதற்கு ஆட்டோவில் இருந்த நபர், “ஏறுங்கள் சார்” என்று ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு கே.கே.நகர் நோக்கி சென்றார். ஆட்டோவில் செல்லும்போது, பிரித்விராஜ் நன்றாக ஆட்டோ முழுவதும் கவனித்தார். அப்போது அது தனது ஆட்டோதான் என்று உறுதி செய்து கொண்டார். கே.கே.நகர் ராணி அண்ணா நகர் வந்தது. பிரித்விராஜ், இங்குதான் நான் இறங்க வேண்டும் என்று கூறி ஆட்டோ ஓட்டி வந்த நபரை பிடித்துக்கொண்டு, “எனது ஆட்டோவை திருடிய திருடன் இவன்தான்,” என்று சத்தம் போட்டார். இதை கவனித்த பொதுமக்கள் ஆட்டோ ஓட்டி வந்த நபரை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். தகவலறிந்த கே.கே.நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் இருந்து ஆட்டோ ஓட்டி வந்த நபரை மீட்டனர். பின்னர் போலீசார் அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். அதில், நங்கநல்லூர் இந்திரா நகரை சேர்ந்த நாகராஜ்(38) என்றும், இவர் வறுமை காரணமாக ஆட்டோ திருடி பதிவு எண்களை மட்டும் மாற்றி ஆட்டோவை ஓட்டி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. போலீசார் நாகராஜை கைது செய்தனர்.



from Dinakaran.com |01 Apr 2021 https://ift.tt/39wyV24