கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக-வின் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில், திமுக தலைவர் ஸ்டாலினின் 68-வது பிறந்த நாளை ஒட்டி 6800 நபர்களுக்கு சமபந்தி பிரியாணி விருந்து அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. கிருஷ்ணகிரி கார்நேசன் திடலில் இந்த விருந்து நடத்தவும் திட்டமிடப்பட்டது. ஆனால், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் பிரியாணி விருந்து அளிக்க தேர்தல் அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை. மாறாக, 68 கிலோ கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட மட்டும் தேர்தல் அலுவலர் கற்பகவள்ளி அனுமதி அளித்தார்.

சமபந்தி விருந்துக்கு ஏற்பாடு செய்த திமுக-வினருக்கு இது ஏமாற்றத்தை அளித்தபோதும், தேர்தல் விதிகளால் கேக் மட்டும் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினர். இந்நிகழ்ச்சிக்கு, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட துணை அமைப்பாளர் அஸ்லம் ரஹ்மான் ஷெரீப் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரான செங்குட்டுவன் எம்எல்ஏ 68 கிலோ கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியை தொடர்ந்து, சமபந்தி விருந்துக்காக தயாரிக்கப்பட்ட பிரியாணியை வாகனங்களில் ஏற்றி கிருஷ்ணகிரி நகரின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு சென்ற திமுக-வினர் பொதுமக்களுக்கு வழங்கினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்