ஆவடி: ஆவடி அருகே திருமுல்லைவாயல், சி.டி.எச் சாலையை ஒட்டி சத்தியமூர்த்தி நகரில் துணைமின் நிலையம் அமைந்துள்ளது. இங்கு இருந்து அண்ணனூர், திருமுல்லைவாயல் மற்றும் ஆவடி, அம்பத்தூரில் ஒரு சில பகுதிகளுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. மேற்கண்ட மின் நிலையத்தின் கட்டுப்பாட்டில் 1 லட்சத்துக்கு மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன. இந்த மின் நிலையத்தில் நேற்று மாலை 6.30மணி அளவில் திடீரென்று ஒரு  டிரான்ஸ்பார்மர் தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்த பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அங்கு திரண்டு வந்தனர். இதனால், அங்கு பரப்பரப்பு ஏற்பட்டது.   இதனையடுத்து, மேற்கண்ட பகுதி முழுவதும் மின் தடை ஏற்பட்டது. பின்னர், மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பிறகு, அவர்கள் தீயணைப்பான் கருவிகளுடன் டிரான்ஸ்பார்மரில் பற்றிய தீயை அணைத்தனர். அதன் பிறகு, மாற்று ஏற்பாடுகளை செய்து மின் வினியோகம் செய்தனர். இதனால், ஒன்றரை மணி நேரம் மேற்கண்ட பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.  புத்தாண்டு முன்னிட்டு பொருட்களை வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர். மேலும், சி.டி.எச் சாலையும் இருளில் மூழ்கியதால் வாகன ஓட்டிகளும் சிரமப்பட்டனர். இதோடு மட்டுமல்லாமல், மேற்கண்ட இடங்களில் உள்ள வணிக நிறுவனங்கள், கடைகளில் வியாபாரம் செய்ய முடியாமல் வியாபாரிகளும் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 



from Dinakaran.com |01 Jan 2021 https://ift.tt/3hw1M9z