ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே தண்டுமாநகர் கிராமத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் படித்தவர்கள் அதிகம் உள்ளனர். இதனால் கடந்த 2009 - 2010ம் ஆண்டு நூலக கட்டிடம் கட்டப்பட்டது. இதில், அப்பகுதியை சேர்ந்த படித்தவர்கள், இளைஞர்கள் என அனைவரும் பொது அறிவை வளர்த்துக்கொள்ளும் விதமாக தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள் எழுதிய நூல்கள் ஆகியவற்றை இந்த நூலகத்தில் படித்து வந்தனர். இந்நிலையில், பல மாதங்களாகவே இந்த நூலகம் திறக்கப்படாமல் மூடியே கிடக்கிறது. இதனால் புத்தகமும் வீணாகிறது.நூலகம் மூடியே கிடப்பதால் அப்பகுதியை சேர்ந்த சிலர் நூலக கட்டிடத்தில் மாடுகளை இரவு நேரத்தில் கட்டிப்போட்டு உள்ளனர். இதனால் நூலகம் மாட்டு தொழுவமாக மாறியுள்ளது. எனவே, மூடிக்கிடக்கும் நூலகத்தை திறக்கவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து, அப்பகுதி மக்களும் மாணவர்களும் கூறியதாவது: தண்டுமாநகர் பகுதியில் உள்ள நூலகம் பல மாதங்களாகவே மூடியே கிடக்கிறது. அதை திறப்பதற்கு ஆட்கள் இல்லை. ஏற்கனவே வேலை செய்த நூலகருக்கு போதுமான சம்பளம் இல்லாததால் வேலைக்கு வருவதில்லை. இதனால் நூலகம் திறப்பதில்லை. தற்போது அங்கு மாடுகள் கட்டப்பட்டு கிடக்கிறது. எனவே, பல மாதங்களாக மூடியே கிடக்கும் நூலகத்தை திறக்க ஒரு நூலகரை நியமித்து நூலகத்தை திறக்க வேண்டும் என கூறினர்.



from Dinakaran.com |31 Aug 2020 https://ift.tt/3lrPoZP