சென்னை: சென்னை உள்பட தமிழகம் முழுவதும் விதிகளை மீறி வெடி வெடித்தது தொடர்பாக 1,614 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு அனுமதித்த நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்ததால் கைதானவர்களில் 517 பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக 758 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசுகளை விற்பனை செய்ததாக 259 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்திருந்தது. தீபாவளியான நேற்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், அதேபோல் இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அறிவிக்கப்பட்ட நேரம் கடந்து பட்டாசு வெடிப்பவர்கள் மீது சென்னை காவல்துறை வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தது. இருப்பினும் அரசின் அறிவுறுத்தலை மீறி பலரும் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து பட்டாசு வெடித்தனர். இது தொடர்பாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 1,614 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மற்ற மாவட்டங்களிலும் விதிகளை மீறி பட்டாசு வெடித்தல், விதி மீறி பட்டாசு விற்பனை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சென்னையில் கடந்த ஆண்டு 2020ம் ஆண்டு 428 வழக்குகளும், 2019ம் ஆண்டு 204 வழக்குகளும் பதிவு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.



from Dinakaran.com |05 Nov 2021 https://ift.tt/3nZR26T