சென்னை: அதிமுக ஆட்சியின் போக்குவரத்துத்துறை அமைச்சராக எம்.ஆர்.விஜயபாஸ்கர் இருந்தார். அவரது பதவி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தொடர் புகார்கள் வந்தது. அதைத்தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் 22ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான கரூர் சென்னை உட்பட 26 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.குறிப்பாக சென்னையில் ஆர்.ஏ.புரத்தில் உள்ள சாய் கிருபா அடுக்குமாடி குடியிருப்பின் 2வது தளத்தில் உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடு, பெருங்களத்தூரில் உள்ள அவரது உதவியாளர் பாலசுப்பிரமணியன் வீடு, வில்லிவாக்கம் 3வது எம்டிஎச் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 3வது தளத்தில் வசித்து வரும் அவரது நண்பர் ரவிக்குமாருக்கு சொந்தமான வீடு, மேற்கு மாம்பலம் ராமகிருஷ்ணாபுரம் கோகுலம் காலனியில் உள்ள டெடி இந்தியா பிரவேட் லிமிடெட் நிறுவனத்தில் அதிரடி சோதனை நடந்தது. இந்த சோதனையில் கணக்கில் வாரத பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.இந்த சோதனையின்போது சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள வீட்டில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இருந்தார். அப்போது அவர், அமைச்சர் பதவிக்கு வருவதற்கு முன்பு இருந்த சொத்துக்கள் மதிப்பும், அமைச்சராக இருந்து 5 ஆண்டுகளுக்கு பிறகு சேர்த்த சொத்துக்கள் மதிப்பும் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. மேலும், 26 இடங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கணக்காய்வு செய்த போது, 10 மடங்கிற்கு மேல் சொத்துக்கள் மதிப்பு உயர்ந்து இருந்தது தெரியவந்தது.அந்த அதிரடி சோதனையில் கணக்கில் வராத 25 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் மற்றும் பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகள் மற்றும் நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட பணம் பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் படி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி விஜயலட்சமி, சகோதரர் சேகர், பங்குதாரராக உள்ள நிறுவனங்கள், உறவினர்கள், உதவியாளர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 2021 பிரிவு 13(2),13(1)(பி), 2018 மற்றும் 12,13(2), 13(1)(பி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.இந்நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் கிடைத்த ஆவணங்களின் படி வருமானத்திற்கு அதிகமாக கைப்பற்றப்பட்டுள்ள சொத்தக்கள் குறித்தும், எந்த வருமாணத்தில் அந்த சொத்துக்கள் வாங்கப்பட்டது. அதற்கான ஆவணங்களுடன் நேற்று சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கும் படி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு கடந்த 20ம் தேதி சம்மன் அனுப்பட்டது. அந்த சம்மன் படி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து இருக்க வேண்டும். ஆனால் அவர் நேரில் ஆஜராகாமல் கடிதம் ஒன்று அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில், தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதால் நான் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளேன். இதனால் நேரில் ஆஜராக முடியவில்லை. எனவே உள்ளாட்சி தேர்தல் பணி முடிந்த உடன் வரும் 12ம் தேதிக்கு பிறகு லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அனுப்பிய அந்த கடிதத்தை ஏற்றுக் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், மீண்டும் சம்மன் அனுப்புவது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதால் நான் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளேன். இதனால் நேரில் ஆஜராக முடியவில்லை.



from Dinakaran.com |01 Oct 2021 https://ift.tt/3kXnuqe