செஞ்சி: தனது 2வயது குழந்தையை சரமாரியாக தாக்கிய இளம்பெண்ண 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து சிறையில் அடைக்கப்பட்டார். இவ்விவகாரத்தில் அவரது காதலனை பிடிக்க தனிப்படை போலீசார் சென்னை விரைந்துள்ளனர்.  விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மணலப்பாடி மதுரா மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் வடிவழகன் (37). இவரது மனைவி துளசி (22). தம்பதிக்கு கோகுல் (4), பிரதீப் (2) என 2 குழந்தைகள். கடந்த 40 நாட்களுக்கு முன் தகராறு காரணமாக குழந்தைகளுடன் துளசி, ஆந்திராவில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில் அவர் 2 வயது குழந்தை பிரதீப்பை, சரமாரியாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. கடந்த பிப்ரவரி மாதம் இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதை பார்த்த  வடிவழகன், சத்தியமங்கலம் போலீசில் புகார் அளித்தார்.இதையடுத்து சத்தியமங்கலம் போலீசார் ஆந்திரா சென்று துளசியை செஞ்சி அழைத்து வந்து விசாரித்தனர். அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர்போல பேசியதால், உளவியல் மருத்துவர் மூலம் வாக்குமூலம் மற்றும் மருத்துவ சான்றிதழ் பெற முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதுபற்றி போலீசார் தெரிவித்த தகவல் வருமாறு: வடிவழகனும், துளசியும் சென்னையில் தங்கி ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தனர். அப்போது சென்னையை சேர்ந்த பிரேம்குமார் என்பவருடன் துளசிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் கள்ளக்காதலாக மாறியது. அடிக்கடி போனில் பேசி வந்துள்ளனர். இதைதொடர்ந்து 2019ல் அங்கிருந்து வடிவழகனும், துளசியும் செஞ்சிக்கு வந்துவிட்டனர். அதன்பின்னரும் வீடியோகால் மூலம் துளசியும், பிரேம்குமாரும் பேசி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் பிரேம்குமார் துளசியிடம், இரண்டு குழந்தைகளையும் அடித்து துன்புறுத்து, அதைப்பார்த்து உன் கணவன் உன்னை விட்டு பிரிந்து விடுவான். நாம் சந்தோஷமாக இருக்கலாம் என்று கூறியதாக தெரிகிறது. இதையடுத்து துளசி தனது 2வது மகனை அடித்து துன்புறுத்தி அதனை வீடியோவாக எடுத்து வைத்துள்ளார். இது கணவருக்கு தெரியாது. பிரேம்குமாருடன் துளசி தொடர்ந்து போனில் பேசிவருவது வடிவழகனுக்கு தெரியவே தகராறு ஏற்பட்டு குழந்தைகளுடன் துளசி ஆந்திரா சென்றுள்ளார். அங்கு சென்று மனைவியை பிரிந்து விடுவதாக கூறி, தாலி மற்றும் அவரது செல்போனை வாங்கிக்கொண்டு வடிவழகன் செஞ்சி திரும்பிவிட்டார்.  துளசி வைத்திருந்தது ஆன்ட்ராய்டு போன் என்பதால் அதனை வடிவழகனுக்கு உபயோகப்படுத்த தெரியவில்லை. உறவினர்களிடம் கொடுத்து ஆன் செய்த போது துளசி 2வது மகனை அடித்து துன்புறுத்திய வீடியோவை பார்த்துள்ளனர். அதை உறவினர் ஒருவர் சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளார். இது வைரலாக பரவியதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் வடிவழகன் இதுபற்றி போலீசில் புகார் செய்தார். போலீசார் துளசியை அழைத்து வந்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மனநல மருத்துவரிடம் காண்பித்தனர். அவர் ஆய்வு செய்து துளசிக்கு எந்தவித மனநல பாதிப்பும் இல்லை என சான்றிதழ் அளித்தார். அதன்பின் துளசியை கைது செய்து செஞ்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி தினேஷ் விசாரித்து துளசியை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார், அவரை சிறையில் அடைத்தனர். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். மேலும் துளசியின் கள்ளக்காதலன் பிரேம்குமார் சென்னையில் இருப்பதாக தகவல் கிடைத்ததால் அவரை தேடி தனிப்படை போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.



from Dinakaran.com |31 Aug 2021 https://ift.tt/3sZyqG6