தூத்துக்குடி: தூத்துக்குடி - எட்டயபுரம் ரோடு ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்தவர் குருசாமி (58). தூத்துக்குடி மேலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளராக பணியாற்றிய இவர், தற்போது தூத்துக்குடி மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் சார்பதிவாளராக பணியாற்றிய போது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ஹெக்டர் தர்மராஜ் தலைமையிலான குழுவினர் நேற்று காலை முதல் பத்திரப்பதிவுத் துறை அதிகாரி குருசாமியின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். இது இரவு வரை நீடித்தது. இதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இதுபற்றி அதிகாரிகள் கூறுகையில், தூத்துக்குடி மாவட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் மேலாளராக பணிபுரிந்து வரும் குருசாமி மீது கடந்த 2015 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் சேர்த்ததாக புகார்கள் வந்தன.இதனையடுத்து அவர் மீதும், அவரது மனைவி, மகன் குரு ஆகியோர் மீதும் வருமானத்திற்கு அதிகமாக ரூ.83 லட்சத்திற்கும் அதிகமான சொத்துகள் சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து அவரது வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்பட்டது. இதில் பணம் மற்றும் நகைகள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. ஆனால் ரூ.40 லட்சம் வரையில் சொத்துகள் சேர்த்ததற்கான ஆவணங்கள் கிடைத்துள்ளன. மேலும் அவருக்கு அப்பகுதியில் சொந்தமாக 10க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளிட்ட சில கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து துறை ரீதியான விசாரணை நடந்து வருகிறது என்றனர்.



from Dinakaran.com |30 Jul 2021 https://ift.tt/3rJmI24