சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் புவியரசன் கூறியதாவது: தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் இன்று நீலகிரி, கோவை, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக்கூடும். நாளை (2ம் தேதி) நீலகிரி, கோவை மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னகல்லார், வால்பாறையில் தலா 1 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.



from Dinakaran.com |01 Aug 2021 https://ift.tt/3yjHqI5