திண்டுக்கல்: கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலையீட்டால் திண்டுக்கல் ஆவின் நிறுவனத்திற்கு ரூ.4.32 கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. திண்டுக்கல்லிற்கு நேற்று வந்த தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க மாநில பொருளாளர் சங்கர் அளித்த பேட்டி: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆவின் பால் ஒன்றியத்தில் மாவட்டம் முழுவதும் உள்ள 7 வழித்தடங்களில் பால் விற்பனை செய்ய 7 முகவர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். அப்போதைய அதிமுக அரசின் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலையீட்டின் காரணமாக, கடந்த 13.2.2020 முதல் எவ்வித முன்னறிவிப்புமின்றி 7 முகவர்களும் நிறுத்தப்பட்டு, ஒரு முகவருக்கு மட்டுமே 7 வழித்தடங்களிலும் பால் விநியோகம் செய்ய உரிமை வழங்கப்பட்டது. ஒரு நாளைக்கு 22 ஆயிரம் லிட்டர் ஆவின் பால் மாவட்டம் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டது. அந்த முகவருக்கு கொடைக்கானலில் பால் விற்பனை செய்ய லிட்டருக்கு 6 ரூபாய் 25 காசுகள், பழநியில் லிட்டருக்கு 5 ரூபாய் 55 காசுகள், திண்டுக்கல்லில் லிட்டருக்கு 3 ரூபாய் 87 காசுகள் கமிஷன் வழங்கப்பட்டது. இது ஏற்கனவே வழங்கப்பட்ட கமிஷனை விட லிட்டருக்கு 2 ரூபாய் கூடுதல்.  இதனால் நாள் ஒன்றுக்கு திண்டுக்கல் ஆவின் நிறுவனத்துக்கு ரூ.40 ஆயிரம் வீதம் மாதத்திற்கு ரூ.12 லட்சம், ஒரு வருடத்திற்கு ரூ.1 கோடியே 44 லட்சம் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 3 வருடங்களாக ரூ.4 கோடியே 32 லட்சம் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தற்போதைய தமிழக அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும். மேலும் முறைகேடாக வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து, மீண்டும் பழையபடியே ஒப்பந்தம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.



from Dinakaran.com |01 Aug 2021 https://ift.tt/3zUtbd9