துறையூர்: திருச்சி அருகே சிறுத்தை தாக்கி படுகாயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். திருச்சி மாவட்டம், துறையூர் அருகே கொல்லிமலை அடிவாரம் பகுதியில் ஆங்கியம் கிராமம் உள்ளது. இங்கு சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக நேற்று தகவல் பரவியது. இதைத்தொடர்ந்து ஆங்கியம்-கோனேரிப்பட்டி செல்லும் வழியில் சிறுத்தை உலவுகிறதா என்பதை கிராம மக்கள் நேற்று மாலை வரை தீவிரமாக கண்காணித்து கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதி புதரிலிருந்து திடீரென சிறுத்தை வெளியே வந்து ஆங்கியம் கிராமத்தை சேர்ந்த துரைசாமி (65) மீது பாய்ந்து கீழே தள்ளியது. இதில் அவருக்கு தலை, மார்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. இதேபோல் ஹரிபாஸ்கர்(20) என்பவரின் கையை கடித்து விட்டு ஓடியது. கிராம மக்கள் இருவரையும் மீட்டு, தா.பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் இருவரும் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தகவலறிந்த வனத்துறையினர் கண்காணிப்பு கேமரா, கூண்டு ஆகியவற்றுடன் ஆங்கியம் பகுதிக்கு சென்று சிறுத்தையை பிடிப்பதற்காக அங்கு முகாமிட்டுள்ளனர். கிராம மக்கள் மாலை 6 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என ஒலிபெருக்கி மூலம் எச்சரித்தனர். சிறுத்தை தாக்கி 2 பேர் காயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



from Dinakaran.com |01 Aug 2021 https://ift.tt/3j7OyB9