சென்னை: அடுத்து வரும் 10 ஆண்டுகளில் கோயில்களுக்கு வரும் பக்தர்கள் நலன் கருதி தங்கும் விடுதி, கழிப்பறை, குடிநீர், பார்க்கிங் வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மாஸ்டர் பிளான் தயார் செய்ய ஆலோசகர்களை நியமனம் செய்ய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 44 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இதில், திருத்தணி முருகன் கோயில், பழனி தண்டாயுதபாணி சுவாமி, திருச்செந்தூர் முருகன், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் உடப்ட 530 பெரிய கோயில்கள் அடக்கம். இந்த கோயில்களுக்கு  உள்ளூர் மட்டுமின்றி, வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் நலன் கருதி கோயில்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டியுள்ளது.இப்பிரச்னைக்கு முடிவு கட்டும் வகையில் அறநிலையத்துறை அதிகாரிகள், அடுத்து வரும் 10 ஆண்டுகளுக்கு கோயில்களுக்கு வரும் பக்தர்கள் நலன் கருதி மாஸ்டர் பிளான் எனப்படும் பெருந்திட்ட வரைவு அறிக்கை தயார் செய்ய உத்தரவிட்டனர். அதன்பேரில், மாநிலம் முழுவதும் உள்ள கோயில்களில் மாஸ்டர் பிளான் தயாரிக்கும் பணிக்காக அறநிலையத்துறை சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் மற்றும் கோயில் சார்ந்த பகுதிகளில் பெருந்திட்ட வரைபடம் வளர்ச்சி பணிகளுக்கான அறிக்கை தயார் செய்வதற்கு இத்துறைக்கென கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு ஆலோசகர்களுக்கு தகுதியுடைய பட்டியல் தயாரிக்க முன் அனுபவம் வாய்ந்த நிறுவனங்களிடம் இருந்து ஒப்பந்தப்புள்ளிகள் வரும் ஆகஸ்ட் 23ம் தேதிக்குள் வரவேற்கப்படுகின்றன என்று தெரிவித்துள்ளது. இதையடுத்து விரைவில் ஒப்பந்த நிறுவனம் இறுதி செய்யப்பட்டு அந்த நிறுவனம் மூலம் விரிவான அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.  குறிப்பாக, அடுத்து வரும் 10 ஆண்டுகளுக்கு கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்காக தங்கும் விடுதி வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, பார்க்கிங் வசதி உள்ளிட்ட அனைத்து கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட இருக்கிறது என்று அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘மாநிலம் முழுவதும் 47 முதுநிலை கோயில்கள் மூலம் பெருந்திட்ட வரைவு அறிக்கை தயார் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  அதே போன்று மற்ற கோயில்களில் மாஸ்டர் பிளான் தயாரிக்க ஒப்பந்த நிறுவனங்கள் தேர்வு செய்யப்படுகிறது. இந்த நிறுவனங்கள் மூலம் கோயில்களின் கட்டமைப்பை மேம்படுத்த மாஸ்டர் பிளான் தயாரிக்கப்படுகிறது. அதன்பேரில், அந்த கோயில்களில் மாஸ்டர் பிளான் அடிப்படையில் திட்டம் செயலாக்கத்துக்கு கொண்டு வரப்படுகிறது’ என்றார்.



from Dinakaran.com |31 Jul 2021 https://ift.tt/3j5xuvr