சென்னை: தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 வகுப்புகளில் படித்த மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து அவர்களுக்கான மதிப்பெண் பட்டியலில் தேர்ச்சி என்று அறிவிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணை: கடந்த 2020-21ம் கல்வி ஆண்டில் படித்த மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியலில் மதிப்பெண்ணுக்கு பதிலாக தேர்ச்சி என்று அச்சிடப்படும் என்று அரசு அறிவித்து இருந்தது. அதன் அடிப்படையில் 10, பிளஸ் 1 வகுப்பு மாணவர்கள் அனைவரும் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளார் என்று சான்று அளிக்கப்படுகிறது என்ற வாசகத்தை அச்சிட்டு, ஒவ்வொரு பாடத்துக்கும் மதிப்பெண்கள் பதிவு செய்வதற்கான பகுதியில் மட்டும் மதிப்பெண்களுக்கு பதிலாக தேர்ச்சி என்று அச்சிட்டு சான்றிதழ் வழங்கப்படும்.  இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த அரசாணை வெளியிடப்பட்டதை அடுத்து, மாணவர்களுக்கு மதிப்பெண் சான்று வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தொடங்கியுள்ளது.



from Dinakaran.com |31 Jul 2021 https://ift.tt/3x8ZIKQ