தாம்பரம்:செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் தாம்பரத்தில் உள்ள மெட்ராஸ் கிறிஸ்துவக் கல்லூரி இணைந்து கொரோனா நோயாளிகளுக்கு தொலைபேசி வழி ஆலோசனை வழங்க முடிவு செய்து அதற்காக கல்லூரி வளாகத்தில் ஆலோசனை வழங்கும் மையத்தை உருவாக்கி உள்ளது. இந்த ஆலோசனை வழங்கும் மையம் திறப்பு நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் பால் வில்சன் தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக ஊரகத் தொழில் துறை அமைச்சர்  தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு ஆலோசனை மையத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பேசுகையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் தமிழக அரசின் சிறப்பான நடவடிக்கைகள் காரணமாக கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் பெரும்பாலும் காலியாக உள்ளது.இந்த நிலையே நீடிக்க வேண்டும் என ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன். தொற்று பரவலை கட்டுப்படுத்த மருத்துவர்கள், அனைத்து துறை அதிகாரிகள் கடுமையாக பாடுபட்டனர். அவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பேசினார். இந்த நிகழ்ச்சியில், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத், சட்டமன்ற உறுப்பினர்கள் தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் இ.கருணாநிதி உட்பட பலர் கலந்து கொண்டனர். காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த ஆலோசனை மையம் செயல்படுகிறது. கொரனோ பாதிப்படைந்தவர்கள் அதில் இருந்து மீண்டவர்கள் மனநல ஆலோசனைக்கு 1800 599 7636 என்ற  எண்ணில்  தொடர்பு கொண்டு ஆலோசனைகள் மற்றும் உதவிகளைப் பெறலாம் எனவும்  மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.



from Dinakaran.com |29 Jun 2021 https://ift.tt/35ZbvAg