சென்னை: சென்னை மாவட்ட கலெக்டர் விஜயாராணி  தலைமையில் நிலுவையில் உள்ள சான்றிதழ்கள் பட்டா மாற்றம் தொடர்பான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் நிலுவையில் உள்ள உங்கள் தொகுதியில் முதலமைச்சர் மனுக்களின் நிலை, இணைய வழி சாதி, இருப்பிட சான்றிதழ், பட்டா மாற்றம், வாரிசு சான்றிதழ் வழங்குதல், முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம் ஆகியவை குறித்து கலெக்டர் விரிவாக ஆய்வு செய்தார்.இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கை: அலுவலர்களை பொதுமக்கள் தொடர்பு கொண்டால் சரியாக பதில் அளிக்கவும் நிலுவையில் உள்ள மனுக்களை அடுத்து ஆய்வு கூட்டத்திற்குள் குறைக்கும் படி அறிவுறுத்தப்பட்டது. ஒவ்வொரு வாரமும் வரும் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் மனுதாரர்களுக்கு தாக்கீதுகளை வழங்கவும் மேற்படி மனுதாரர்களை விசாரணை செய்து ஆவணங்களை பெற்று வெள்ளிக்கிழமை அன்று தகுதியான நபர்களுக்கு பட்டாக்களை வழங்கிடவும் நிலவரி திட்ட தனி வட்டாட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.மாவட்ட வருவாய் அலுவலர்கள் மற்றும் உதவி இயக்குநர் (நில அளவை) இருவரும் அதிக மனுக்கள் நிலுவையில் உள்ள வட்டங்களை பார்வையிட்டு ஆய்வு செய்யவும் அறிவுறுத்தப்பட்டது. நிராகரிக்கப்பட்ட பட்டா மனுக்களை வருவாய் கோட்டாட்சியர்கள் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க அறிவுறுத்தப்பட்டது. நிரந்தர நில பதிவேடுகளை கணினி மயமாக்கும்பொழுது ஏற்படும் கணினி தட்டச்சு பிழைகளை சரிசெய்யும் அதிகாரம் வருவாய் கோட்டாட்சியர்களுக்கு உள்ளது. கோப்புகளை சம்பந்தப்பட்ட வட்டத்திற்கு சென்று ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் சரிசெய்யவும் உத்தரவிடப்பட்டது. மேலும், கலெக்டர் வாட்ஸ்அப்பில் பகிரும் செய்திகளுக்கு உடனடியாக பதில் அளிக்கவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



from Dinakaran.com |01 Jul 2021 https://ift.tt/3qJn0oX