காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே செவிலிமேட்டில் இயங்கும் டாஸ்மாக் கடையை மூடக்கோரி கலெக்டரிடம், அப்பகுதி மக்கள் புகார் மனு அளித்தனர். காஞ்சிபுரம் செவிலிமேடு, அம்பேத்கர் நகரை சேர்ந்த பொதுமக்கள், காஞ்சிபுரம் கலெக்டர் மா.ஆர்த்தியை, நேற்று நேரில் சந்தித்து புகார் மனுவை வழங்கினர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது. காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை செவிலிமேடு பகுதியில் அரசு டாஸ்மாக் கடை செயல்படுகிறது.  இங்கு வரும் குடிமகன்களால் பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் வாகன ஓட்டிகள் பல இன்னல்கள் மற்றும் சாலை விபத்துக்களை சந்தித்து வருகின்றனர். மதுகடைக்கு பின்புறம் செவிலிமேடு பகுதியில் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. மது கடைக்கு அருகில் உயர்நிலைப்பள்ளி, மசூதி, கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. காஞ்சிபுரம்  செங்கல்பட்டு - வந்தவாசி கூட்டுச் சாலை சந்திப்பில்  மதுக்கடை உள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்படும் சூழ்நிலையும் நிலவுகிறது.   இந்த பகுதியில் வசிக்கும் பெண்கள், கல்லூரி, பள்ளி, வேலைகளுக்கு செல்ல மதுபான கடையை கடந்து செல்வதால் பல சிரமத்துக்கு உள்ளாகின்றனர். மதுக் கடையில் மது வாங்கும் குடிமகன்கள், சாலையோரத்தில் மது அருந்துவதால் பெண்கள் சாலையை கடந்து செல்ல அச்சப்படுகின்றனர். எனவே, அந்த சாலை ஓரத்தில் உள்ள டாஸ்மாக் கடையை உடனே அகற்ற வேண்டும் என கூறப்பபட்டுள்ளது.



from Dinakaran.com |30 Jun 2021 https://ift.tt/3h6ImcS