சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களுக்கு உதவ முதல்வர் நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதற்காக தொழில் அதிபர்கள், பெரும் நிறுவனங்கள், திரையுலகினர், வெளிநாடுவாழ் தமிழர்கள் உள்ளிட்ட பலரும் முதல்வர் நிவாரண நிதிக்கு நிதியுதவி செய்து வருகிறார்கள். அந்த வகையில் தமாகாவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏவும், மூத்த தலைவருமான கோவை தங்கம் தலைமையில் முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.25லட்சம் வழங்கப்பட்டது. நேற்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து காசோலையை வழங்கினர்.கோவை தங்கம், ரயில்வே ஞானசேகரன், நீலகிரி சந்திரன் ஆகியோர் இணைந்து ரூ.10 லட்சமும், தமிழ்நாடு கட்டுமான உரிமையாளர் நலச்சங்கம் சார்பில் முன்னாள் எம்எல்ஏ வேலூர் ஞானசேகரன் மற்றும் சங்க தலைவர் வெங்கடேசன், ஜி.எம்.ஏழுமலை ஆகியோர் ரூ.10 லட்சமும், திமுக வழக்கறிஞர்கள் சிவ சண்முகம், ஸ்ரீகிரி பிரசாத், நடிகர் விஜித் ஆகியோர் ரூ.5 லட்சம் என மொத்தம் ரூ.25 லட்சம் வழங்கப்பட்டது. இச்சந்திப்பின் போது, தமாகாவில் இருந்து விலகிய நீலகிரி மாவட்ட தலைவர் சந்திரன், சி.பி.அருண் பிரசாத், ஸ்ரீசத்யா அருண் பிரசாத், சி.ஏ.ராஜ்குமார், சீதாராமன், நிசில், மன்சூர் அலி ஆகியோரும் உடன் இருந்தனர்.



from Dinakaran.com |01 Jul 2021 https://ift.tt/36267My