ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தூத்துக்குடியில் உள்ள வேதாந்தா நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் காப்பர் தொழிற்சாலை, பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக கடந்த 2018-ம் ஆண்டு மூடப்பட்டது. தற்போது நாடு முழுவதும் கரோனா பரவல்காரணமாக, ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. இந்தச் சூழலில், ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி அலகுகள் மூலம் தினமும் 1,050 டன் ஆக்சிஜன் தயாரித்து இலவசமாக வழங்கமுடியும் என்றும் அதற்கு அனுமதிகோரியும் உச்ச நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மனு தாக்கல் செய்தது. முதல்வர் பழனிசாமி தலைமையில் கடந்த 26-ம்தேதி நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில், ஆக்சிஜன் தயாரிப்புக்காக 4 மாதங்களுக்கு மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறந்து நடத்த அனுமதிப்பது என்று ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது. இந்த முடிவை உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது. இதையடுத்து ஆக்சிஜன் தயாரிப்புக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்த உச்ச நீதிமன்றம், ஆலையை கண்காணிக்க ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கவும் உத்தரவிட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்