மதுரை: தமிழகத்தில் தங்கத்தின் விலைக்கு நிகராக மணல் விற்பனை செய்யப்படுவதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அரசின் மணல் குவாரிகளில் ஆன்லைன் மூலம் புக்கிங் செய்யும் வசதியை பொதுமக்கள் பயன்படுத்த முடிவதில்லை என்றும், இடைத்தரகர்கள் மூலம் வாங்கப்படும் மணலின் விலை அதிகமாக உள்ளதால் நியாயமான விலையில் மணல் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அத்துடன் மதுரை, சிவகங்கை, விருதுநகர், நெல்லை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் மணல் கொள்ளை நடைபெறுகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. விவசாயம் பாதிக்கப்படுகிறது. அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு நிலுவையில் உள்ளன. இந்த மனுக்கள் நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தன. அப்போது ஒரு யூனிட் மணலின் விலை வெளி மார்க்கெட்டில் 45,000 ரூபாய் என்று கூறப்படுகிறது என்றும் தங்கத்தின் விலை அளவு தமிழகத்தில் மணல் விற்கப்படுகிறது என்றும் கூறிய நீதிபதிகள் சாதாரண பொதுமக்களுக்கு அரசு நிர்ணயித்த விலையில் மணல் கிடைக்கிறதா என்பதை உறுதிப்படுத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.



from Dinakaran.com |01 Dec 2020 https://ift.tt/37qIxcC