சென்னை: அமைச்சர் துரைக்கண்ணு மறைவு வேதனை, அதிர்ச்சியை தருவதுடன் அதிமுகவுக்கு பேரிழப்பு என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே அதிமுகவில் பயணித்து கட்சிக்காக பாடுபட்டவர் துரைக்கண்ணு என புகழாரம் சூட்டினார். அமைச்சர்கள் காமராஜ், உதயகுமார், விஜயபாஸ்கர் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அமைச்சர் துரைக்கண்ணு உருவப்படத்துக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினர். அமைச்சர் துரைக்கண்ணுக்கு கொரோனா தொற்று காரணமாக மூச்சுதிணறல் இருந்து வந்தது. இதையடுத்து மூச்சு திணறல் காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அவர், நேற்று நள்ளிரவு 11.15 மணிக்கு மரணம் அடைந்தார். இந்நிலையில், இன்று காலை தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள அமைச்சர் துரைக்கண்ணு படத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனும் அஞ்சலி செலுத்தினார். அமைச்சர் துரைக்கண்ணு மறைவு வேதனை, அதிர்ச்சியை தருவதுடன் அதிமுகவுக்கு பேரிழப்பு என்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். முன்னதாக அமைச்சர் துரைக்கண்ணுவின் குடும்பத்தினரை சந்தித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறினார். அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் சொந்த ஊரான ராஜகிரியில் அடக்கம் செய்ய ஏற்பாடுவதாக உறவினர்கள் தெரிவித்தனர். மேலும் அமைச்சர் துரைக்கண்ணுவின் சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் ராஜகிரி வன்னியடி கிராமத்தில் உள்ள அவரது தோட்டத்தில் இன்று அரவது உடல் அடக்கம் செய்யப்படுகிறது.



from Dinakaran.com |01 Nov 2020 https://ift.tt/3kMKrKi